சென்னையில் பானி பூரி தயாரிக்கும் பணியில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த பீகார் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
சென்னை அயனாவரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் அஜித் குமார். இவர் பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். அஜித் குமார் பானி பூரி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது சொந்த மாநிலமான பீகாரில் இருந்து 6 சிறுவர்கள் உட்பட 7 பேரை பானிபூரி விற்பனை செய்வதற்காக அழைத்து வந்துள்ளார்.
ஆனால் அவர்கள் 7 பேரையும் கொத்தடிமைகளாக நடத்தியதோடு மட்டுமல்லாமல், விற்பனை குறைவாக இருப்பதாக கூறி அஜித் குமார் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து 3 சிறுவர்கள் மட்டும் தப்பி சென்று பீகாரில் உள்ள உறவினர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து சென்னை செனாய் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் நல வாரியத்தில் சிறுவர்களின் உறவினர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து அயனாவரம் தாசில்தார் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை மீட்டனர். மேலும், பானிபூரி தொழில் உற்பத்தி செய்யும் இடத்தின் உரிமையாளர் அஜித் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.