தமிழ்நாடு

முதன்முறையாக வாக்களிக்கவிருக்கும் 68 வயது இருளர் இன முதியவர்! -விழிப்புணர்வூட்டிய ஆட்சியர்

முதன்முறையாக வாக்களிக்கவிருக்கும் 68 வயது இருளர் இன முதியவர்! -விழிப்புணர்வூட்டிய ஆட்சியர்

sharpana

இருளர் குடியிருப்பைச் சேர்ந்த 68 வயது முதியவர் முதன்முறையாக வாக்களிக்கவுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முதியவருக்கு மட்டுமல்லாமல் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த மேலும் 80 பேருக்கு வாக்களர் அடையாள அட்டையை வழங்கி உரிமையுடன் வாழ வைத்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

இருளர் இன மக்கள்  சாதிச்சான்றிதழ், ஓட்டுரிமை, குடியிருப்பு உரிமை போன்ற பல்வேறு அடிப்படை உரிமைகளுக்காக இன்றும் போராட்டங்கள் நடத்தி வரும் சூழல் நிலவி வருகிறது. அப்படியிருக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீசநல்லூர் இருளர் குடியிருப்புக்குச் நேரடியாகவே சென்று வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தி 80 பேருக்கு மேல் வாக்களர் அடையாள அட்டையை வழங்கியிருக்கிறார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

ஏற்கனவே, செங்கல் சூளையில் கொத்தடிமைகளாய் இருந்த இம்மக்களை மீட்டு இலவசா பட்டா, வீடுகள், செங்கல் சூளை பணிக்கான உதவிகள் போன்றவற்றை அமைத்துக் கொடுத்தது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம். இத்தனை வசதிகள் கிடைத்தாலும் குடிமகன் என்பதற்கு சான்றாய் இருக்கும் வாக்களர் அடையாள அட்டை இல்லாமல் தவித்து வந்துள்ளனர் இம்மக்கள்.

இந்நிலையில், இவர்கள் தயாரிக்கும் செங்கற்களைக் கொண்டே வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தியதோடு, எப்படி வாக்களிக்கவேண்டும் என்பதையும் விழிப்புணர்வூட்டியிருக்கிறார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

இந்நிகழ்வில்தான்,  கன்னியப்பன் என்ற 68 வயது முதியவருக்கு முதன்முறையாக வாக்களர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

முதன்முறையாக வாக்களிக்கப்போகும் நெகிழ்ச்சியில் அவர் மட்டுமல்ல. மொத்த இருளர் குடியிருப்பே உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த வாக்குரிமையே இருளர் சமூக மக்கள் தகுதியான வேட்பாளர்களுக்கு வாக்களித்து தங்கள் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பேராயுதமாய் இனி வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும்.

- வினி சர்பனா