கிறிஸ்துவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதனிடம் பட்டியலிட வேண்டாம் என வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர்.
கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்க்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்திருந்தார். நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்து குறித்து பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், வழக்கின் எல்லையை மீறி இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க கூடாது எனவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து கிறிஸ்துவ மிஷனரிகள், கல்வி நிறுவனங்கள் குறித்த தனது கருத்தை திரும்பப் பெறுவதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில் கிறிஸ்தவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் 64 வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.