தமிழ்நாடு

"டீ குடிக்க போனேன்" - கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் முதியவர் கொடுத்த அதிர்ச்சி

webteam

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் டீ குடிக்க கடைக்கு சென்றதால் பரபரப்பு நிலவியது.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த 29-ம் தேதி முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நள்ளிரவில் திடீரென கொரோனா வார்டில் இருந்து அந்த முதியவர் காணாமல் போனார். மருத்துவர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

காணாமல்போன முதியவரை போலீசார், சுகாதாரத்துறை ஊழியர்கள் மருத்துவமனை முழுவதும் நள்ளிரவில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அதிகாலையில் காணாமல் போன முதியவரே கொரோனா வார்டுக்கு திரும்பி வந்தார்.

போலீசார் எங்கு போனீர்கள் என்று விசாரித்தனர். அப்போது அவர் "டீ குடிக்கலாம்னு போனேன், ஆனால் டீக்கடை எதுவுமில்லை, வேறொரு வார்டில் நண்பர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க சென்றதாகவும் பார்க்க முடியாததால் திரும்பி வந்து விட்டேன்" என்று சர்வசாதாரணமாக கூறியது போலீசாரையும், மருத்துவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.