தமிழ்நாடு

“தமிழகத்தில் அரசு பணிகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு 62% பேர் லஞ்சம்”- ஆய்வில் தகவல்

jagadeesh

தமிழகத்தில் பணிகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு 62 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தங்களுக்கு தேவையா‌ன சேவைகளை பெற சுமார் மூன்றில் இரண்டு பேர் லஞ்சம் கொடுத்ததாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 62 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்திருப்பதாக தெரியவந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 10 சதவிகிதம் அதிகரிக்கவும் செய்துள்ளது.  மாநில அளவில் ஐந்தாயிரத்து 700-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன. 

ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் லஞ்சம் கொடுப்பது அதிக அளவில் இருப்பதாகவும், டெல்லி, ஹரியானா, குஜராத், மேற்கு வங்கம், கேரளா, கோவா மற்றும் ஒடிஷாவில் இத்தகைய போக்கு குறைவாக இருப்பதாகவும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சொத்து மற்றும் நில விவகாரங்களுக்கு லஞ்சம் கொடுப்பது அதிகப்பட்சமாக இருப்பதாகவும், பெரும்பாலான நிலம் மற்றும் கட்டட பதிவு முறைகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டிருந்தாலும், லஞ்சம் கொடுத்ததாக கூறியவர்களில் 41 சதவிகிதம் பேர் இந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியை நிறைவேற்றிக்கொள்ள லஞ்சம் கொடுத்ததாக 19 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் காவல்துறை மற்றும் பிற அரசு துறைகள் இடம்பெற்றுள்ளன. அபராதம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுப்பதும் அதிகரித்துள்ளது. எட்டு சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுக்காமல் தங்களது பணிகளை முடித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். அதிகம் லஞ்சம் கொடுக்கும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.