தீக்குளித்த பெண்மணி புதியதலைமுறை
தமிழ்நாடு

சொத்து பிரச்னையால் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரைவிட்ட பெண்.. திருப்பூரில் சோக நிகழ்வு!

திருப்பூரில் சொத்து பிரச்னை காரணமாக வழக்கு தொடுத்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து பெண்மணி தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சரவணகுமார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தெக்கலுாரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(60). இவரது தந்தை ராமசாமி மற்றும் இரண்டு சகோதாரர்கள் பாலசுப்ரமணி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு தாராபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே, வழக்கு விசாரணையில் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனால், மனவேதனையடைந்த கோவிந்தம்மாள், நீதிமன்ற வளாகத்திற்கு வந்து விஷம் அருந்திவிட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தீவைத்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றிய தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இறந்து போன கோவிந்தம்மாள் பாகப்பிரிவினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஆனால், வழக்கில் தோல்வியடைந்தார். மேல்முறையீட்டை கோர்ட் தள்ளுபடி செய்த காரணத்தால், மனமுடைந்து அவர் கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன் விஷத்தை குடித்து விட்டு, கூடையில் வைத்திருந்த மண்ணெண்ணைய ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை” என்று தெரிவித்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல!!

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்