பிரவீஷ்  PT
தமிழ்நாடு

நாமக்கல் | பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு; பைக் ஓட்டி சென்ற தந்தைக்கும் ஏற்பட்ட சோகம்!

PT WEB

செய்தியாளர்: மனோஜ் கண்ணா

நாமக்கல் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை அடுத்த அம்மையப்பா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், தனது 6 வயது மகன் பிரவீஷ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியதில் வண்டியின் முன்னே அமர்ந்திருந்த சிறுவன் பிரவீஸ் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த சிறுவன்

இருசக்கர வாகனம் பேருந்தின் முன்சக்கரத்துக்கு அடியில் சிக்கியதில் சதீஷ்குமாரின் கைகள் துண்டாகின. பதைபதைக்க வைக்கும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து திரண்ட ஊர் பொதுமக்கள், அந்த வழியே வந்த அதே கல்லூரியின் பிற வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

“இந்த சாலையில் காலை 8 மணி முதல் ஒன்பதரை மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி வாகனங்கள் தாறுமாறான வேகத்தில் செல்வதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறோம். ஏற்கெனவே கோரிக்கை வைத்தும் அதை அதிகாரிகள் சரிசெய்யவில்லை” என்று கூறிய மக்கள், அதனாலேயே இதுபோன்ற விபத்துகள் தொடர்வதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

தகவல் அறிந்த திருச்செங்கோடு காவல்துறையினர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும் பொதுமக்கள் சமாதானம் அடையாமல் பேருந்துகளை சிறைபிடித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரமாக திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேகத்தடை அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக வேகத்தடைகளை அமைத்தனர். இருப்பினும் சிறுவனின் மரணமும், சிறுவனின் தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.