தமிழ்நாடு

கம்பம் வனச்சரகத்தில் பணியில் சேர்ந்த 6 பெண் வனக்காவலர்கள்

கம்பம் வனச்சரகத்தில் பணியில் சேர்ந்த 6 பெண் வனக்காவலர்கள்

webteam

தேனி மாவட்டம் கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 பெண் வனக் காவலர்கள் பணியில் சேர்ந்தனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம் வனச்சரகத்தின் மேற்குப்பகுதி இயற்கை வனப்பகுதியாகவும், கிழக்குப்பகுதி மேகமலை வன உயிரின சரணாலயமாகவும் உள்ளது. இங்கு தேக்கு, சந்தனம், தோதகத்தி உள்ளிட்ட அரிய வகை மரங்களும், யானை சிறுத்தை, காட்டுப்பன்றிகள், மரஅணில், சிங்கவால் குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை மூலிகைகளும் உள்ளன. 

ஆனால் அனைத்தையும் கண்காணிக்க போதிய பணியாளர்கள் இல்லாமல் வனத்துறையினர் சிரமப்பட்டு வந்தனர். இதனால் வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டை, மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் 
சிக்கல் ஏற்பட்டு வந்தன.

இதே நிலைமை தமிழகம் முழுவதும் இருந்து வந்தன. இதையடுத்து தமிழக அரசு வனத்துறையில் கூடுதலாக 
பணியாளர்கனை நியமிக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனக்காவலர் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பெண்களும் பங்கேற்றனர்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தற்போது பணியில் சேர்ந்து வருகிறார்கள். கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் மட்டும், 6 பெண் 
வனகாவலர்கள் பணியில் சேர்ந்தனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “முதன்முறையாக பெண் வனகாவலர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு பறக்கும்படை பிரிவில் பணி வழங்கப்படும். இவர்கள் காடுகளில் சட்ட விரோதமாகக் கடத்தப்படும் அரிய வகை மரங்கள் மற்றும் பொருட்களைத் தடுத்தல், காடுகளில் திடீரெனப் பற்றும் காட்டுத் தீயை அணைக்கும் 
பணியில் ஈடுபடுவர்.

தேனி மாவட்டத்தில் மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு 19 பெண் வனக்காவலர்கள் உட்பட 38 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மேற்கு இயற்கை வனப்பகுதியில் 14 பெண்வனக்காவலர்கள் உட்பட 34 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த வனச்சரகத்திற்குட்ப்பட்ட காடுகளின் எல்லைப்பகுதி, குற்றச்செயல் நடைபெறும் இடங்கள் குறித்து ரேஞசர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பின்னர் கோவையில் 21 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தனர்.