தென் மாவட்டங்களில் கனமழை புதிய தலைமுறை
தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் கனமழை | எங்கெல்லாம் பள்ளி விடுமுறை? எந்தெந்த ரயில்கள் ரத்து? முழு விவரம்..!

ஜெனிட்டா ரோஸ்லின்

நேற்று காலை முதல் தென்மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் இதன்காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்னும் சில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பொது விடுமுறை

இந்த 4 மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்களும் இன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையானது வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் வரலாறு காணாத மழை!

மழை அளவை பொறுத்தவரை திருநெல்வேலி மாவட்டத்தினை பொறுத்தவரை நேற்று காலை 8.30 மணியளவில் 671 மி.மீ மழை பெய்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 6,338 மி மீ. மழையானது பெய்துவருகிறது. திருநெல்வேலியில் வரலாறு காணாத அளவுக்கு மழை அளவு பதிவான நிலையில், கிட்டத்தட்ட 20 மணி நேரங்களை கடந்தும் தொடர் கனமழையானது பெய்து வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக் திருநெல்வேலி உட்பட அதை சுற்றியுள்ள பல மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளநீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ரத்தான ரயில்கள்...

கனமழை காரணமாக சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில், நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, திருச்நெந்தூர் - பாலக்காடு இடையேயான ரயில் சேவை, நெல்லையில் இருந்து ஜாம்நகர் செல்லும் ரயில் சேவை, கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் விரைவு ரயில் சேவை போன்றவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.