ஆன்லைன் சூதாட்டம் PT
தமிழ்நாடு

சென்னையை அதிரவைக்கும் ஐபிஎல் சூதாட்டம்.. அதிரடி காட்டிய போலீஸ்.. வசமாக சிக்கிய நபர்கள்

PT WEB

சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றப்பட்டதாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பூக்கடை தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அத்தோடு சௌகார்பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், சௌகார்பேட்டையைச் சேர்ந்த சந்தீப்(33), சௌகார்பேட்யைச் சேர்ந்த கணேஷ் (32), சௌகார்பேட்யைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஜெயின் (32), சௌகார்பேட்யைச் சேர்ந்த தீரஜ்( 41), கொண்டித்தோப்பு ஜிதேந்திரா(41), அங்கித்(32) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கைதான 6 நபர்களும் reddyannaoofficical, Lazer247 ஆகிய இணையதளங்கள் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வட இந்தியாவில் இருந்து இயக்கப்படும் இந்த பெட்டிங் இணையதளங்களில் கிரிக்கெட் சூதாட்டத்திற்கு ஆள் சேர்த்து விடுவதன் மூலம் ஒவ்வொரு பெட்டிங்க்கும் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை இணையதளம் வாயிலாக இவர்களுக்கு கிடைத்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நேரடியாக இணையதளம் நடத்தி மோசடியில் ஈடுபடவில்லை என்றாலும் இணையதளத்தின் ஏஜெண்டுகள்போல செயல்பட்டு தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் நண்பர்கள் என சேர்த்து விட்டு லிங்க் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட வைத்து அதன் மூலம் லாபம் பெற்று வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதேபோல இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏஜெண்டுகள் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஆட்களை சேர்த்து விட்டு லாபம் பார்த்து வருவதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இத்தகைய சூதாட்ட இணையதளங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் விளையாடும்போது அதிக அளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் மேட்ச்சில் ஒரு ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் எத்தனை ரன்கள் எடுப்பர்? தோனி எத்தனை ரன் அடிபார்? நடப்பு ஓவரில் விக்கெட் விழுமா? விழாதா? என்பதுபோல பெட்டிங் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளையாடுவதற்கு, முன்தொகையாக ரூபாய் 5000-லிருந்து பல லட்சங்கள் வரை கட்டி இணையதளம் வாயிலாக சூதாட்டத்தில் பலர் விளையாடி வந்ததும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இணையதளம் நடத்தப்படுவது யார் என்று விவரங்கள் தங்களுக்கு தெரியாது எனவும் தாங்கள் ஆள் சேர்த்து விட்டால் தங்களுக்கு கணிசமான முறையில் பணம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட கிரிக்கெட் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மூலம் இந்தியாவில் பலகோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருக்கலாம் எனவும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய இணையதளங்கள் மூலம் கிரிக்கெட் சூதாட்டம் மட்டுமின்றி தேர்தல் தொடர்பான சூதாட்டமும் நடந்திருக்கலாம் எனவும், இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட ஆறு நபர்களும் சௌகார்பேட்டை பகுதியில் பொம்மைக்கடை, துணிக்கடை, உணவுக் கடை, நகைக்கடை ஆகியவற்றை நடத்தி வருவதாகவும் இவர்கள் ஆன்லைன் சூதாட்ட இணையதள ஏஜெண்டுகளாக மறைமுகமாக செயல்பட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டு வரும் அதேவேளையில் இணையதளம் எங்கிருந்து செயல்படுகிறது? இதனை செயல்படுத்துவது யார்? ஆன்லைன் பெட்டிங் மாபியாக்கள் எங்கு உள்ளனர்? என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.