Govt Home Stay PT Desk
தமிழ்நாடு

காதல் பிரச்னையால் அரசு காப்பகத்தில் வசித்த 6 சிறுமிகள் தப்பியோட்டம்.. சமூக பாதுகாப்புத்துறை அதிரடி ஆக்‌ஷன்!

காஞ்சிபுரத்தில் செயல்படும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஆறு சிறுமிகள் நேற்று அதிகாலை தப்பியோடிய நிலையில், நான்கு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

PT WEB

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், கல்வி நிலையை தொடர இயலாத குழந்தைகள் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் சிறு வயதில் திருமண வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் காவல் துறையினரால் மீட்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் இந்த அரசு காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இந்த காப்பகத்தில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் என மொத்தம் 29 பேர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் பிரச்னையால் 7 சிறுமிகளை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தினால் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வழக்கம்போல் சிறுமிகள் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து இரவு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரின் அறையை தாழிட்டு விட்டு 6 சிறுமிகள் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய ஆறு சிறுமிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதேபோல சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து நேற்று மாலை வரை இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் மேலும் இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டனர். 6 சிறுமிகளில் 4 சிறுமிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு சிறுமிகளை மீட்க தனிக்குழு அமைத்து தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் தப்பி ஓடும் வகையில் அஜாக்கிரதையாக இருந்த காப்பக உதவியாளர் தீனா தேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.