5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துள்ளது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், எதிர்வரும் சுதந்திர தினத்தை புத்துணர்ச்சியுடன் கொண்டாட பாஜக விரும்புவதாக தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு ஏற்றவாரு ஆக. 13 முதல் 15 வரை அனைத்து வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும், அதற்காக பாஜக நிர்வாகிகள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
பாஜக மகளிரணி சார்பில் தேசியக் கொடியை ஏந்தியவாறு வந்தே மாதரம் பாடலை பாடி விழிப்புணர்வு செய்ய உள்ளதாகவும், இந்த 3 நாட்கள் பல்வேறு கலைத்துறையை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திமுகவினர் கூறிவருவதற்கு பதில் பேசிய அவர் இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டிற்கு நல்ல லாபத்தை 5ஜி அலைக்கற்றை ஏலம் பெற்று தந்துள்ளது என்றும், அது மிகுந்த வெளிப்படைத் தன்மையோடு தான் நடைபெற்றது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் இதுபற்றி குறை கூறும் ஆ.ராசாவுக்குத்தான் இதில் எவ்வாறு ஊழல் செய்யலாம் என்று தெரியும். அதனால் தான் அவர் பேசுகிறார் என்றும் விமர்சனம் செய்தார்.
அதுமட்டுமின்றி கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் இந்த அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டு கூட இல்லாமல் நல்லமுறையில் ஆட்சி நடத்தி வருகிறது. தொடர்ந்து மத்திய அரசு பல நல்ல திட்டங்களை செய்து வருகிறது. அதற்கெல்லாம் மத்திய அரசை பாராட்டாமல் குறை மட்டும் கூறுகிறார்கள் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு சொல்லித்தான் விலை ஏற்றம் நடைபெற்று வருகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர் நீங்கள் விலையை ஏற்றி விட்டு மத்திய அரசை சொல்லக் கூடாது என்று கூறினார்.