தமிழ்நாடு

ஆற்றில் மாயமான 24 மணிநேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்மணி - என்ன நடந்தது?

ஆற்றில் மாயமான 24 மணிநேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்மணி - என்ன நடந்தது?

webteam

தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது ஆற்றில் மாயமான 55 வயதானப் பெண் ஒருவர், 24 மணிநேரத்திற்கு பிறகு ஆற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே பாரதபள்ளி பகுதியைச் சேர்ந்த புஷ்பபாய் என்ற பெண்மணி நேற்று மதியம் தனது வீட்டின் அருகில் செல்லும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றபோது அவர் தண்ணீரில் முழுகி ஆற்றில் மாயமானார். இதை தொடர்ந்து அவரை ஊர்மக்கள் தேடியதுடன், குலசேகரம் தீ அணைப்பு துறையினரும் இரவு ஏழு மணிவரை தேடி வந்த நிலையில், இரவு தேடும் பணிகளை நிறுத்தி வைத்து இன்று காலையில் இருந்து மீண்டும் தேடுதல் பணி துவங்கியது.

இந்நிலையில் இன்று தாமிரபரணி ஆற்றில் திக்குறிச்சி பகுதியில் பாலத்தின் அடிப்பகுதியில் ஒரு தடுப்பில் பிடித்து நினைவு இழந்த நிலையில் புஷ்பபாய் கிடப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மீட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிகிச்சை பெற்றுவரும் புஷ்பபாய், 24 மணிநேரம் தண்ணீரில் கிடந்தும், ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அவர் தனது உறவினர்களுடனும் மருத்துவர்களிடமும் உற்சாகப் பேசியநிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் குலசேகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 24 மணிநேரத்திற்கு பிறகு ஆற்றில் இருந்து புஷ்பபாய் உயிரோடு மீட்டதால் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.