திருச்சியில் நியாய விலைக் கடைகளில் இருந்து மாவுமில்களுக்கு முறைகேடாக அரிசி விற்கப்படுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமாகியிருக்கிறது.
திருச்சி மல்லிகைபுரம், வரகநேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 6 ரேஷன் கடைகளில் அரிசி முறைகேடாக விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து புதிய தலைமுறை களத்தில் இறங்கியது. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் மாவுமில் கண்காணிக்கப்பட்டது. அதில் ரேஷன் கடையிலிருந்து இரண்டு மூன்று மூட்டைகளை அப்சல் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்வதும், அதை மாவுமில்லில் கொடுப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தியாளர் குழு நடத்திய விசாரணையில் தினமும் 500 கிலோ அரிசி இவ்வாறு நியாயவிலை கடைகளில் இருந்து முறைகேடாக விற்கப்படுவது தெரியவந்தது.
இவ்வாறு மாவு மில்லுக்கு கொண்டு வரப்படும் ரேசன் அரிசியில் வண்டுகளும், புழுக்களும் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாத மாவுமில் உரிமையாளர்கள் அரிசியை அரைத்து முறுக்கு மாவுடன் கலந்து விடுகின்றனர். இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் கேட்டதற்கு அந்த நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஏழை மக்களுக்கு செல்ல வேண்டிய அரிசி கொள்ளை அடிக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை அரசு தடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.