தமிழ்நாடு

வேலூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

வேலூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

webteam

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மூத்த மகள் அனிஷா(5).

திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி ஒரு வார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுமியை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அனிஷா உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுமி உயிரிழந்தது அந்த ஊர் மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.