சிறுமியை கடித்த Rottweiler வகை நாய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை: பூங்காவிற்கு அழைத்து வரப்பட்ட வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயம்

webteam

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக் ஷா ஆகியோர், பூங்காவில் உள்ள ஒரு சிறு அறையில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காவலாளி ரகு, தனது உறவினர் ஒருவர் இறந்ததாகக் கூறி விழுப்புரம் சென்றுள்ளார். பூங்காவில் சோனியாவும், அவரது மகள் சுதக் ஷாவும் இருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை பூங்கா அருகே வசிக்ககூடிய புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களுடன் பூங்காவிற்குச் சென்றுள்ளார். அப்போது பூங்காவில் விளையாடி கொண்டு இருந்த காவலாளியின் மகள் சுதக் ஷாவை இரண்டு நாய்களும் கடித்ததுக் குதறியுள்ளன. இதை பார்த்த நாயின் உரிமையாளர் அமைதியாக இருந்துள்ளார். இதையடுத்து குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த சோனியா, இரண்டு நாய்களிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

அப்போது அந்த நாய்கள் சோனியாவையும் கடித்துள்ளன. இதை பார்த்த நாயின் உரிமையாளர் நாயை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு போலீஸார், நாயின் உரிமையாளர் புகழேந்தியை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், நாயின் உரிமையாளர், தனது செலவில் சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறியதை அடுத்து சிறுமி, அப்போலோ குழந்தைகள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் புகழேந்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் இன நாய்களை வைத்திருந்ததாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.