தமிழ்நாடு

தண்ணீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் : விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..!

தண்ணீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் : விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..!

webteam

திருப்பத்தூரில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த மண்டல நாயனகுண்டா அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர். இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். அதில் மூத்த மகன் சித்தார்த் (5) வழக்கம்போல பிற நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடியக் கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள ஆற்று ஓடையில் நீர் சேமிக்க தோண்டப்பட்டு உள்ள 20 அடி பள்ளத்தில் சிறுவன் தவறி விழுந்துள்ளதாக தெரிகிறது.

உடனடியாக சிறுவனை மீட்க முயன்ற அப்பகுதி பொதுமக்களால், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மீட்க முடியவில்லை. இதற்கிடையே திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்ததால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி சிறுவன் உடலை மீட்டனர்.  ஆனால் அதற்குள் சிறுவன் உயிரிழந்துவிட்டார்.

இந்த தண்ணீர் சேமிக்கும் குழி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தோண்ட பட்டதாகவும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் தான் இந்த சிறுவன் இறந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுதொடர்பாக கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.