தமிழ்நாடு

ராணுவ வீரர் வீட்டில் அரங்கேறிய இரட்டை கொலை; 70 சவரன் நகை கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை

ராணுவ வீரர் வீட்டில் அரங்கேறிய இரட்டை கொலை; 70 சவரன் நகை கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை

webteam

காளையார்கோவில் அருகே ராணுவ வீரர் வீட்டில் தாய் மற்றும் மனைவியை மர்ம நபர்கள் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு. இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் மகன் ஸ்டீபன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சந்தியாகு தனது மனைவி, மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். சந்தியாகு நேற்று இரவு தோட்டத்திற்கு காவல் காக்க சென்ற நிலையில், வீட்டில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள், தூங்கி கொண்டிருந்த ராணுவ வீரரின் தாய் ராஜ குமாரி (60), மற்றும் மனைவி சினேகா (30) ஆகிய இருவரையும், கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, பணம் நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

காலையில் சந்தியாகு வீட்டிற்கு வந்து பார்த்த போது, தனது மனைவி, மருமகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இரட்டைகொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுமார் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் (பொறுப்பு) நேரில் ஆய்வு செய்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “காளையார்கோவில் கொலை சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில தடயங்கள் கிடைத்துள்ளன. அதனை வைத்து குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும், கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையின் மூலம் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புகின்றனர் உயிரிழந்த அப்பாவி பெண்களின் உறவினர்கள்.