செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து தனியார் பயணிகள் பேருந்து சேலம் நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 11-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மட்டுமின்றி ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு வாகனங்கள், கார்கள் என பல வாகனங்களில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை விரைவுபடுத்தினார்.
இதனிடையே இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் சந்தித்து விசாரித்தார்.
இந்நிலையில், அதிக அளவிலான பயணிகளை ஏற்றியதாலும், அதிவேகத்தில் பேருந்தை இயக்கியதாலும் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே “ஏற்காடு மலைப்பாதையில் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பாதையில் இயக்க அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்” என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.