செய்தியாளர்: முத்துபழம்பதி
---------
புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் நமணசமுத்திரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள காவல்நிலையம் அருகே தேநீர் அருந்தி கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதி உள்ளது. அதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓம்சக்தி மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வந்த 2 வேன்களும் (இதில் சென்னை திருவள்ளூரை சேர்ந்த பக்தர்கள் இருந்துள்ளனர்), திருக்கடையூரில் இருந்து வந்த காரும் (இதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் இருந்துள்ளனர்), நமணசமுத்திரம் காவல்நிலையத்திற்கு எதிரே உள்ள தேநீர் கடை அருகே நின்றுள்ளது. 3 வாகனங்களிலும் இருந்து தேநீர் அருந்த சிலர் கீழே இறங்கியுள்ளனர். மற்றவர்கள் வாகனத்திலேயே இருந்துள்ளனர்.
அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மேற்குறிப்பிட்ட வாகனங்களின் மீது மோதியது.
இதில் வாகனத்தில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 வயது சிறுமி உட்பட 19 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், சுரேஷ், சதீஸ், ஜகன்நாதன், சாந்தி என்ற பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநரின் அலட்சியமே முழுக்க முழுக்க இதற்கு காரணமாக அமைந்துள்ளது.