தமிழ்நாடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக அரிசி - தமிழக அரசு உத்தரவு

குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக அரிசி - தமிழக அரசு உத்தரவு

webteam

தமிழகத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசி வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களும் கூடுதல் அரிசி வழங்குவதற்கு தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குரிய ரேசன் பொருட்கள் அனைத்தையும் இலவசமாக வழங்கியது. இந்த நிலையில், முன்னுரிமை உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதல் அரிசி மற்றும் பருப்பு வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

அதாவது, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கும் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், தலா ஒரு கிலோ பருப்பும் வழங்குவதற்கு மத்திய அரசு ஆணையிட்டது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாதந்தோறும், முன்னுரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே குறைந்த விலையில் அரிசி வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் முன்னுரிமை இல்லாத அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்திய உணவு கழகத்திலிருந்து 84 கோடி ரூபாய் செலவில் கூடுதல் அரிசி பெற்று அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குரிய கூடுதல் அரிசியை மே மற்றும் ஜூன் மாதங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.