முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ்-இடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த வருடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில், மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுடன் நெருக்கமானவர்கள் உட்பட பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று விசாரணை ஆணையத்திடம் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் நேரில் ஆஜரானர்.
அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என்றும் ராமமோகன ராவ் கூறினார். நேற்றைய தினம், தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.