தமிழ்நாடு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 5 அடி நீள பாம்பு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 5 அடி நீள பாம்பு

சங்கீதா

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்குள், தஞ்சம் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பு, உரிய நேரத்தில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் பிடிக்கப்பட்டது.

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள், 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வேப்பேரி தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாம்பு இருந்த இரு சக்கர வாகனத்தை, காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவலர்கள், ஆணையர் அலுவலகத்திற்கு பின்புறம் கொண்டு சென்று தனியாக நிறுத்தி வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி தீயணைப்பு துறை வீரர்கள், இருசக்கர வாகனத்தின் இருக்கையை கழட்டி 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வெளியில் எடுத்து பிடிக்க முயற்சி செய்தனர். அப்பொழுது வேப்பேரி தீயணைப்பு துறையை சார்ந்த வீரர் முருகன் என்பவர், 5 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து பையில் அடைத்து எடுத்துச் சென்றார். உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாம்பை பிடித்த காரணத்தினால், எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. இருந்தும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.