கும்பகோணம் பகுதிகளில் வெறிநாய்கள் கடித்ததால் இன்று ஒரே நாளில் 5 குழந்தைகள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கும்பகோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ராம் நகர், பட்டீஸ்வரம், சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் வெறிநாய்களால் தினமும் பத்து பேர் வரை பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று காலை திருவலஞ்சுழியை அடுத்த மணப்படையூர், புதுப்படையூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்ல குழந்தைகள் கிளம்பினர்.
அப்போது வீடுகளின் அருகில் நின்று கொண்டிருந்த இளந்தென்றல், காவ்யா, சிலம்பரசன் உள்ளிட்ட 5 குழந்தைகளை, அங்கிருந்த வெறிநாய்கள் பாய்ந்து வந்து கடித்துள்ளன. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் பதறிக்கதற, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பலத்த காயமடைந்த குழந்தைகளை மீட்டனர்.
தற்போது பட்டீஸ்வரம், சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெறிநாய்கள் குழந்தைகள் மட்டுமின்றி, முதியவர்களையும் அடிக்கடி கடிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு சாலைகளில் சுற்றித் திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.