தமிழ்நாடு

ஓசூர்: ஊராட்சி மன்றத் தலைவர் ஓடஓட விரட்டி கல்லால் தாக்கி கொலை- 5 பேர் கைது

ஓசூர்: ஊராட்சி மன்றத் தலைவர் ஓடஓட விரட்டி கல்லால் தாக்கி கொலை- 5 பேர் கைது

webteam

ஓசூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாரவேந்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் நரசிம்மமூர்த்தி (46). இவர் பி.பி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினரான இவர் தற்போது தளிப்பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார்.

நேற்று இரவு அவர் தளி பகுதியில் பொருட்கள் வாங்கிக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஊர் அருகே அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கட்டையால் தாக்கியுள்ளனர். அந்தக் கும்பலிடம் இருந்து நரசிம்மமூர்த்தி தப்பித்து செல்வதற்குள் அவரை கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சம்பூர்ணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதேபோல் கிருஷ்ணகிரியில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நரசிம்ம மூர்த்தியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை காலையில் செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் ஊரான பி.பி பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.