தமிழ்நாடு

சென்னை: சோதனையில் சிக்கிய ரூ.6 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் - விசாரணைக்கு பின் ஒப்படைப்பு

சென்னை: சோதனையில் சிக்கிய ரூ.6 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் - விசாரணைக்கு பின் ஒப்படைப்பு

Sinekadhara

சென்னையில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 6 கோடி மதிப்பிலான தங்ககட்டிகள், வெள்ளி கட்டிகள் சிக்கியது. ஆவணங்கள் இருந்ததால் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

நாளை வாக்குப்பதிவையொட்டி சென்னையில் வாகன சோதனையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 144 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயிரம் விளக்கு தொகுதியின் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று மாலை அண்ணாசாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அண்ணசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகில் தேர்தல் பறக்கும்படையினர் தனியார் பாதுகாப்பு நிறுவன 4 சக்கர வாகனம் ஒன்றை சோதனை செய்தனர்.

அப்போது வாகனத்திற்குள் பல கிலோ கணக்கிலான தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள் இருந்தது தெரிந்தது. உடனே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தனியார் பாதுகாப்பு வாகனத்தில் வந்த பொறுப்பாளரிடம் விசாரணை நடத்தினார். தி.நகரில் இருந்து சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதாகவும், அதற்கான உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆவணங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்ஆய்வு செய்தனர்.

கிலோ கணக்கிலான தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள் அதனுடைய மதிப்பு ரூ. 6 கோடி என்பது தொடர்பாக ஆவணங்களில் இருந்துள்ளது. மேலும் வைத்திருந்த சில ஆவணங்களை ஆய்வுசெய்த பிறகு மீண்டும் தங்கம், வெள்ளி கட்டிகளை தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடமே ஒப்படைத்தனர்.
தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள், ஆவணங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.