ரயில் விபத்துகளில் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை கடந்த 3 வருடங்களில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் விபத்துகளில் யானைகள் உயிரிழப்பது தொடர்கிறது. 2021ஆம் ஆண்டு 19 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன. 2020ஆம் வருடத்தில் 16 யானைகள் ரயில் விபத்துகளில் உயிரிழந்தன. 2019ஆம் வருடத்தில் 10 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. ரயில் விபத்துகளில் உயிரிழந்த யானைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் அளித்துள்ளார். திமுக உறுப்பினர் ராமலிங்கம் மழைக்கால கூட்டத்தொடரில் அனுப்பிய கேள்விக்கான பதிலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
யானைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால், ரயில் தண்டவாளங்களை யானைகள் பத்திரமாக கடக்க சுரங்கப்பாதைகள் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வெகுதூரம் பயணிப்பதால், பல சமயங்களில் அவை ரயில் தண்டவாளங்களை கடக்கின்றன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.