தமிழ்நாடு

"மடையை அடைக்கலைனா தீக்குளிப்பேன்”.. தண்ணீரில் பயிர் மூழ்கியதால் மதுரை விவசாயி வேதனை!

webteam

மதுரை அருகே நல்லூர் கண்மாய் மீன்களை பிடிப்பதற்காக மடை திறக்கப்பட்ட நிலையில், சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் உடனே மடையை அடைக்கவேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. மடையை அடைக்கவில்லை என்றால் தீக்குளித்து தற்கொலை செய்வேன் விவசாயியொருவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் அருகே நல்லூர் கிராமத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடியாமலும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். பலரும் நகையை அடகு வைத்து விவசாயம் செய்ததால், தற்போது மிகப்பெரிய நஷ்டத்தில் இருப்பதாகவும் கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்படியான நிலையில் தவித்து வருவதாகவும் கண்ணீர் மல்க சொல்கின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நல்லூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, மல்லிப்பூ, கரும்பு, வெங்காயம் மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர்.

மதுரையில் 3-வது மிகப்பெரிய ஏரியாக விளங்குகிறது நல்லூர் கண்மாய். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இங்கு தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக கண்மாய் முழுவதும் நிறைந்து இங்குள்ள விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இது மாறியது. இந்நிலையில், நல்லூர் கண்மாயை குத்தகைக்கு எடுத்த அரசியல் பிரமுகர்கள் சிலர் தங்களது அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி இரவு பகல் பாராது மீன் பிடிப்பதற்காக கண்மாயின் 3 மடைகளையும் திறந்து விடுவதாக சொல்லப்படுகிறது.

இதனால், இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலத்திற்குள் நீர் வருவதாகவும், அதனால் நெற்பயிர், கரும்பு, வாழை, வெங்காயம், மல்லிப்பூ, நிலக்கடலை உள்ளிட்ட விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாயம் செய்ய முடியாமலும் போவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பயிரிட்ட பயிர்களையும் அறுவடை செய்ய முடியாமல் போனதால், இந்தப் பயிர்களை நம்பி தங்களது நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்ததும், தற்போது மிகப்பெரிய நஷ்டத்தில் போனதாக தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி விவசாயியொருவர் பேசுகையில், “அறுவடை செய்ய முடியாததால் தற்போது எங்களது நகைகள் அனைத்தும் ஏலத்தில் மூழ்கும் நிலை உள்ளது. மேலும் சில சமயங்களில் நாங்களே பயிரிட்ட கரும்பு போன்றவற்றை தீட்டு கொளுத்துகிறோம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழக முதல்வர் தங்களது வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். விரைந்து இந்த மடையை அடைக்கவில்லை என்றால், வரும் திங்கள் காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பதை தவிர வேறு வழியில்லை” என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

பல தலைமுறையாக விவசாயம் செய்து வரும் இப்பகுதி விவசாயிகள், இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.