செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அருகே நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட செல்லூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், படுகொலை செய்யப்பட்டார். அவரை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயதங்களுடன் அவரை விரட்டி விரட்டி படுகொலை செய்தது
இதில் படுகாயத்துடன் சாலையில் கிடந்த பாலசுப்பிரமணியனை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்தனர். அதன்பெரில் பாலசுப்பிரமணியனை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடினர். அதில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
குறிப்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனின் நேரடி கண்காணிப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடினர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்துப்பிரச்சனை இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் பாண்டியராஜனுக்கு ஆதரவாக இறந்து போன அவரது சகோதரர் பாலசுப்பிரமணியன் பேசியுள்ளார். சொத்தினை சமமாக பிரித்து தருமாறு கேட்டு மகாலிங்கத்திடம் தொடர்ந்து பிரச்சனை செய்துள்ளார் பாலசுப்பிரமணியன்.
இந்நிலையில் இப்பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணும் விதமாக பாண்டியராஜனின் மகள் பிரியா என்பவரை மகாலிங்கத்தின் மகன் அழகுவிஜய் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர்.
திருமணமான பிரியா மற்றும் அழகுவிஜய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரியா, தனது தந்தை பாண்டியராஜன் வீட்டில் இருந்து கொண்டு அழகுவிஜய் மீது நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பாண்டியராஜன், மகாலிங்கத்திடம் தனது மகளுக்கு சேர வேண்டிய சொத்தினை பிரித்து தருமாறு கேட்ட போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாண்டியராஜனின் புகாரின்படி மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாண்டியராஜனின் மகள் பிரியா, கணவர் அழகுவிஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மகாலிங்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தனது தந்தையும், சகோதரர் பாலசுப்பிரமணியனும் இணைந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவில் உள்ளதாக கூறி மிரட்டி உள்ளார்.
எனவே பாண்டியராஜன் மற்றும் பாலசுப்பிரமணியன் தங்களை தாக்குவதற்கு முன்பாக அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அழகுவிஜய், அவர்களிடம் லோடு மேன்களாக வேலை செய்து வரும் பரத், 17 வயது இளைஞரொருவர், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகியோருடன் சேர்ந்து சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பாலசுப்பிரமணியனை கொலை செய்துள்ளனர்.
பாலசுப்பிரமணியனை கொலை செய்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையானது இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட திருமண பிரச்னையாலும், அவர்களுக்கிடையே சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்னையாலும் நடைபெற்றதாகும். மேலும் இச்சம்பவத்தில் தொடர் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை நடந்து 15 மணி நேரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.