விபத்துக்குள்ளான மினி பேருந்து pt web
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சாலையோரம் கவிழ்ந்த மினி பேருந்து.. 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினி பேருந்து மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சதீஷ்குமார், நிதீஷ் குமார், மாடசாமி, வாசு ராஜா ஆகிய 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் பதினைந்து பேர் மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் பள்ளி மாணவி உட்பட இருவர் சிகிச்சைக்காக மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் மம்சாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், ‘ஒருவழி சாலையை இரு வழி சாலையாக அகலப்படுத்த வேண்டும்; பள்ளி நேரம் உட்பட மம்சாபுரத்திற்கு அடிக்கடி கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டும்; தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்; சேதமடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும் ’எனக் கூறி இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மம்சாபுரம் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.