தாக்கப்பட்ட செய்தியாளர் புதியதலைமுறை
தமிழ்நாடு

மர்ம கும்பலால் தாக்கப்பட்ட நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்! 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடும் போலீஸ்

மர்ம கும்பலால் கொலை வெறித்தாக்குதலுக்கு ஆளான நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார்.

யுவபுருஷ்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலான நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். காமநாயக்கன்பாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரை கடந்த இரண்டு நாட்களாக அடையாளம் தெரியாத நபர்கள் 6 பேர், நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனம் மற்றும் காரிலும் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதே போல் தனது வீட்டின் அருகே உள்ள கடைகாரர்கள் மற்றும் பொது மக்களிடம் அந்த நபர்கள் தன்னைப் பற்றி விசாரித்து வந்ததால், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி அவசர உதவி எண் 100க்கு அழைத்து பேசியுள்ளார். அத்தோடு, இவர் குடியிருக்கும் பகுதிக்கு உட்பட்ட காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திலும், அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் வீட்டின் அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் தன்னை நோட்டமிடுவதை கண்ட நேசபிரபு, வீட்டை விட்டு வெளியேரி அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்துள்ளார்.

அந்த நேரத்தில், தொலைபேசி மூலம் காவலதுறையினருக்கு தெரிவித்து கொண்டு இருக்கு நேரத்தில், காரில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்துள்ளனர். பெட்ரோல் பங்க் மேலாளர் அறையில் இருந்த நேசபிரபுவை தாக்குவதற்காக கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று, அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த கொலை வெறி தாக்குதலில் நேசபிரபுவுக்கு கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே, பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பலரது மத்தியிலும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மாநிலத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட வேண்டி இருப்பதாகவும், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.