தமிழ்நாடு

திண்டுக்கல்லில் காணமல் போன 4 பள்ளி மாணவிகள் கரூரில் பத்திரமாக மீட்பு: நடந்தது என்ன?

திண்டுக்கல்லில் காணமல் போன 4 பள்ளி மாணவிகள் கரூரில் பத்திரமாக மீட்பு: நடந்தது என்ன?

webteam

திண்டுக்கல்லில் பள்ளிக்குச் சென்ற 4 மாணவிகளை காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்த நிலையில், கரூரில் மீட்கப்பட்டனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் புனித செசிலியாள் நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர், திண்டுக்கல்லை அடுத்துள்ள சென்னமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர், திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் என நான்கு மாணவிகளும் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று குழந்தைகள் தினம் என்பதால் மாணவிகள் அனைவரும் கலர் ஆடையில் வர வேண்டும் என பள்ளி நிர்வாகம் அறிவித்ததை அடுத்து பள்ளியில் கல்வி பயின்று வரும் அனைத்து மாணவிகளும் கலர் ஆடையில் பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளி முடிந்து 4 மாணவிகளும் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் பயந்து போன பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு, நான்கு மாணவிகளும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிச் சென்றதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்கள் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பள்ளிக்கு வந்த காவல் துறையினர் பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கரூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 4 மாணவிகளையும், கரூர் மாவட்ட காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், திண்டுக்கல் போலீசார் கரூர் சென்று 4 மாணவிகளையும் அழைத்து வந்தனர்.