கடந்த 2 மாதங்களில் கொலை செய்யப்பட்டவர்கள் pt web
தமிழ்நாடு

நெல்லை காங். நிர்வாகி To ஆம்ஸ்ட்ராங் | தொடரும் கொலைகள்.. கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!

தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களுக்குள் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Angeshwar G

“என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்? யாருக்கும் பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு கெட்டு குட்டிச்சுவராகிவிட்டது...” என ஆளும் தரப்புக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்குள் நான்கு அரசியல் பிரமுகர்களின் கொலைகள் நடந்தேறி இருக்கின்றன. அனைத்து விவகாரங்களிலும் காவல்துறையினரின் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் அதிகமாக பேசப்பட்ட நான்கு கொலைச் சம்பவம் குறித்து பார்க்கலாம்..

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கேபிகே ஜெயக்குமார்.நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த கரைசுத்து புதூர் பகுதியைச் சேர்ந்தவர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த இவரை, மே 2 ஆம் தேதியில் இருந்து காணவில்லை என அவரது மகன் உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன்பின் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்தது.

இதன்பின்னர், மே நான்காம் தேதி அவரது இல்லத்திற்குப் பின்புறம் 100 மீட்டர் தொலைவில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் எழுதிய கடிதங்களை வைத்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதன்பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களிடம் விசாரணை கடுமையாக நடத்தப்பட்டது.

ஜெயகுமார்

முக்கிய திருப்பமாக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த வழக்கிலும் தொடர்பில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. காரணம், இரண்டு கொலைகளிலும் கொலை செய்த விதம் ஒற்றுமைகள், தடயங்கள் ஒரே மாதிரியாக உள்ளது. மேலும் ராமஜெயத்தை கடத்தி கொலை செய்து எரிக்க முற்பட்டு உள்ளனர்.அங்கே சிலர் தூரத்தில் இருந்ததால் உடலை போட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஜெயக்குமார் கொலையில் அவரை எரித்துள்ளனர் என தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு மே 22 ஆம் தேதி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்த சம்பவம் கொலையா தற்கொலையா என்ற முடிவிற்கு வரமுடியாத சூழல் நிலவுவதாகவே தெரிகிறது.

அதிமுக சேலம் பகுதி செயலாளர் சண்முகம்

Murder case

சேலம் கொண்டலாம் பட்டி பகுதி அதிமுக செயலாளர் சண்முகம். ஜூலை 3 ஆம் தேதி இரவு சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், சேலம் மாநகராட்சி 55-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவரும், திமுக பிரமுகரான சதீஷை கைது செய்ய வேண்டும் என சண்முகத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் திமுக பிரமுகர் சதீஸ் உட்பட 14 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சதீஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் புதிய சட்டதிருத்தத்தின் BNS Act படி கூட்டு சதி, கூலிப்படை ஏவி கொலை செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது இல்லம் அருகே படுகொலை செய்யப்பட்டார். கொலையில் ஈடுபட்டதாக கூறி 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல் சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மருத்துவமனை எதிரே குவிந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே மறியலில் ஈடுபட்டவர்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஆஸ்ரா கார்க் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதன்பின்னரும் மறியலை கைவிட மறுத்ததால், போராட்டக்காரர்களை காவலர்கள் கைது செய்து அப்புறப்படுத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தால் சென்னை சென்ட்ரல் சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து சேவை முடங்கியது

தீபக் ராஜா

தீபக் ராஜா

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. 35 வயதான இவரை, பட்டப்பகலில் உணவக வாசல் ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. முகத்தை மறைத்துக் கொண்டு கும்பல் அவரை வெட்டும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. கை, முகம், தலை என பல்வேறு பாகங்களில் வெட்டுக்கள் பட்டநிலையில், ரௌடி கும்பல் தப்பிவிட்டது. இரத்த வெள்ளத்தில் இருந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பல்வேறு கொலை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலையாளிகளை கைது செய்ய ஆறு தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. நெல்லையையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 7 நாட்களுக்குப் பிறகே கொலை நடந்த நபரின் உடல் வாங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.