தமிழ்நாடு

ரசாயன கம்பெனியில் வாயு கசிவு; 4 பேருக்கு மூச்சுத் திணறல் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

ரசாயன கம்பெனியில் வாயு கசிவு; 4 பேருக்கு மூச்சுத் திணறல் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

webteam

சென்னை கொடுங்கையூரில் ரசாயன கம்பெனியில் ஏற்பட்ட வாயு தாக்குதலில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (50) என்பவர், கொடுங்கையூர் சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் ரசாயனம் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். சிறிய கம்பெனியான இதில், அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (58), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அமுதவல்லி (55) ஆகிய 2 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு பணியில் இருந்த போது, ரசாயனம் நிரப்பப்பட்ட ட்ரம்மின் மூடியில் உடைப்பு ஏற்பட்டு திரவம் மொத்தமாக வெளியேறியது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த உரிமையாளர் வெங்கடேசன், அமுதவல்லி, தேன்மொழி ஆகியோர் வாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தனர். இதையடுதது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெளியே நின்றிருந்த தேன்மொழியின் மகன் சுரேஷ் (38) என்பவர் அவர்களை காப்பாற்ற சென்றுள்ளார்.

அப்போது அவரும் மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கும், முல்லை நகர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் 4 பேரையும் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.