தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஒன்று நுழைந்து குழந்தைகளைக் கடத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மட்டும் இல்லாமல் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகில், சாலையோரமாக வேலூரைச் சேர்ந்த சந்தியா என்ற இளம் பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, தனது 4 மாத பெண் குழந்தையுடன் வந்து யாசகம் பெற்றுப் பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
நேற்று இரவு சந்தியா தன் நான்கு மாத பெண் குழந்தையுடன் சாலையோரத்தில் உறங்கியுள்ளார். பின் இன்று காலை சந்தியா எழுந்து பார்த்த போது அவருடன் படுத்திருந்த 4 மாத கைக்குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தியா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில், பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையைக் கடத்தி சென்ற மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 4 மாத பெண் குழந்தையைக் கடத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.