Srilankan tamils pt desk
தமிழ்நாடு

"இலங்கையில் வாழ வழியில்லை" - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் வாழ வழியின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ்கோடி கடல் வழியாக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

Refuges

அப்படி மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், அவரது மனைவி ரீட்டா மேரி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் வந்து இன்று காலை இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்து மணல் திட்டில் நின்றிருந்த இலங்கை தமிழர்கள் நால்வரையும் மண்டபம் இந்திய கடலோர காவல் படை, ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை அழைத்து சென்று ராமேஸ்வரம் மெரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டனர். தொடர்ந்து நால்வரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Boat

இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்தது குறித்து அவர்கள் கூறுகையில், “இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தினசரி ஒருவேளை மட்டுமே சாப்பிட முடிகிறது. மேலும் இலங்கையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பாக வாழ முடியவில்லை. அதனால்தான் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தோம்” என தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு, இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது.