தர்மபுரி அருகே சொத்துக்காக மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்து எரித்த கணவர் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கோட்டை தெரு மசூதி பின் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டார். இதுகுறித்து பாலக்கோடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது முட்புதர் அருகிலிருந்து வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அந்த நபர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து காவல் துறை விசாரணையில் மூர்த்தி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து காவல் துறை விசாரணையில், இறந்து கிடந்தது தனது மனைவி துர்கா தேவி தான் என மூர்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். தான் பெங்களூரில் கட்டிட வேலை செய்து வரும்போது, பெங்களூரை சேர்ந்த துர்கா தேவிக்கும் தனக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த சில ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டு பாலக்கோடு மேல தெருவில் வசித்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
துர்கா தேவியிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்க சொல்லி கேட்டதாகவும், இதனை துர்கா தேவி மறுத்ததால், தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களை வைத்து கொலை செய்ய திட்டமிட்டதாகவும் மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி அவர்களுக்கு ரூ.1.50 லட்சம் தருவதாக கூறி, பெங்களூரை சேர்ந்த அம்ருதின், சகில்பிரேம் கான், பாலக்கோட்டை சேர்ந்த சாதிக் பாஷா ஆகியோரை வரவழைத்துள்ளார். இரவு தூங்கும்போது தனது மனைவியை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து விட்டு, நண்பர்கள் உதவியுடன் தூர்காதேவி உடலை ஆற்று பகுதியில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து கொலை செய்த அடுத்த நாள் ஆற்று பகுதிக்கு சென்ற மூர்த்தி, பெட்ரோலை சடலத்தின் மீது ஊற்றி அடையாளம் தெரியாத வகையில் எரித்துவிட்டு வந்ததாக காவல்துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மீதி பணத்தை வாங்க மூர்த்தியை தேடி வந்த கூலிப்படை ஆட்களை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துர்கா தேவியின் 4 சவரன் தங்க நகை மற்றும் அவர்கள் வைத்திருந்த 5 செல்போன், 2 இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.