தமிழ்நாடு

"மோசடியும் செய்து, அவதூறும் பரப்புவியா?" - ஊழியரை அடித்துக் கொன்று எரித்த கொடூரம்!

"மோசடியும் செய்து, அவதூறும் பரப்புவியா?" - ஊழியரை அடித்துக் கொன்று எரித்த கொடூரம்!

JananiGovindhan

சென்னை அருகே நொளம்பூர், எஸ் & பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (என்ற) சோட்டா வெங்கட் (48). இவர் சினிமா படங்களுக்கு பைனான்ஸ் விடுவது மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பது ஆகியவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார். இவரது வீட்டில் ஒருவரை அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்வதாகவும் அலறல் சத்தம் அதிகளவில் கேட்பதாகவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சில தினங்களுக்கு முன் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலையடுத்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவானதும் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் மட்டும் ரத்தக்கரைகள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து வெங்கட்ராமனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்படியான நிலையில் தலைமறைவான சினிமா பைனான்சியர் வெங்கட்ராமன், நொளம்பூர் இன்ஸ்பெக்டருக்கு தெரிந்த நபர் என்பதால் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தன்னிடம் பணிபுரியும் மதுரவாயலை சேர்ந்த கோபி என்ற நவீன் (47), சரவணன் என்ற கணபதி (29), திலீப் (30) ஆகியோருடன் தான் கூட்டு சேர்ந்து, தன்னிடம் வேலை செய்துகொண்டு தன்னை ஏமாற்றிய பாபுஜி (50) என்பவரை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். மற்றவர்களும் சரணடைந்தனர்.

மேலும் பாபுஜி உடலை போரூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் வைத்து எரித்து விட்டதாகவும் வெங்கட்ராமன் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் மாங்காடு போலீசாருடன் இணைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து பாபுஜியின் உடலை மீட்டு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டபோது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் விசாரணையில் கூறியதாவது:

சினிமா பைனான்சியரான வெங்கட்ராமனிடம், சிலர் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். இதில் பாபுஜி கலெஷன் ஏஜென்டாக சில மாதங்கள் பணிபுரிந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக பாபுஜி கலெஷன் பணம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவரது வீட்டில் இருந்த அவரது மகளின் சுமார் ஐந்து பவுன் நகைகள், விலை உயர்ந்த செல்போனையும் எடுத்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி வெங்கட்ராமன் குறித்து பல்வேறு இடங்களில் அவதூறாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெங்கட்ராமனிடம் இருந்து விலகி, அவரது நண்பரான சினிமா பைனான்சியர் கோபால் (35), என்பவரிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கும் பாபுஜி பண மோசடி செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் பாபுஜி திடீரென தலைமறைவானார். இதையடுத்து பாபுஜியை தீவிரமாக இரு தரப்பினரும் தேடி வந்த நிலையில் இவர்களுக்கு நண்பரான நவீன் மூலமாக பாபுஜியை பிடிக்க வலை விரித்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த பாபுஜியை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே நவீன் வர வழைத்துள்ளார். கோயம்பேடு வந்த பாபுஜியை அங்கு பதுங்கி இருந்த வெங்கட்ராமன், சரவணன், திலீப், நவீன் ஆகியோர் சேர்ந்து காரில் கடத்தி கொண்டு வெங்கட்ராமன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் வைத்து நகை, பணம் குறித்து கேட்டு இரும்பு ராடால் தாக்கியுள்ளனர்.

மேலும் தன்னைக் குறித்து அவதூறாக பேசிய ஆத்திரத்தில் குடிபோதையில் சரமாரியாக வெங்கட்ராமனும் பாபுஜியை தாக்கியிருக்கிறார். இதில் மயக்கம் அடைந்த பாபுஜியை அப்படியே போட்டுவிட்டு அனைவரும் குடிபோதையில் படுத்திருக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது பலமாக தாக்கியதில் பாபுஜி இறந்து போனதை கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் பாபுஜி உடலை காரில் எடுத்து சென்று கொளப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெட்ரோல் ஊற்றி வைத்து எரித்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், நகை, பணம் கையாடல் செய்ததற்காக பாபுஜியை கடத்தி சென்று கொலை செய்தார்களா அல்லது இந்த கொலைக்கு பின்னணியில் பெண் விவகாரம் ஏதாவது உள்ளதா போன்ற கோணங்களில் கோயம்பேடு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள். முதலில் இந்த வழக்கை நொளம்பூர் போலீசார் விசாரித்த நிலையில் பாபுஜி கடத்தப்பட்ட இடம் கோயம்பேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டு வருவதால் இந்த வழக்கு கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு இருப்பதும், நவீன் சினிமா துறையில் துணை நடிகராக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.