தமிழ்நாடு

தேர்தலில் விதிமீறல்: உசிலம்பட்டியில் 4 திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம்

தேர்தலில் விதிமீறல்: உசிலம்பட்டியில் 4 திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம்

நிவேதா ஜெகராஜா

உசிலம்பட்டி நகர்மன்ற தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 4 திமுக பொறுப்பாளர்களை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் நகர் மன்ற தேர்தல் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த நகர் மன்ற தலைவர் தேர்தலின் போது திமுக கூட்டணி உறுப்பினர்கள் 13 பேர் பெரும்பான்மையாக இருந்த நிலையில், திமுக தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செல்விக்கு எதிராக மற்றொரு திமுக வேட்பாளர் சகுந்தலா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், தமிழகம் முழுவதும் இது போன்று கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை அதிரடியாக நீக்கம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கமலைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் சுதந்திரம், மாநில செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, நகர இளைஞரணி செயலாளர் சந்திரன் உள்ளிட்ட நான்கு பேரையும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் முரசொலி நாளிதழ் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.