கடலூர் விபத்து PT Desk
தமிழ்நாடு

கடலூர்: தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 90-க்கும் மேற்பட்டோர் காயம்; 4 பேர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் காயமடைந்துள்ளனர்.

PT WEB

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்கள் பட்டியலில், தனியார் பேருந்து ஓட்டுனர் ஆறுமுகம் மற்றும் நடத்துனர் முருகன் ஆகியோரும் உள்ளனர்.

இந்த கோர விபத்தால் கடலூர் பண்ருட்டி சாலையில் மேல்பட்டாம்பாக்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றி விடப்பட்டது. விபத்தில் அடிபட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

இரு பேருந்துகளில் ஒன்றான துர்கா என்ற தனியார் பேருந்தின் முன் டயர் வெடித்ததால்தான் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.