தமிழ்நாடு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த 4 கொரோனா நோயாளிகள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த 4 கொரோனா நோயாளிகள்!

JustinDurai

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு பல மணி நேரமாக ஆம்புலன்ஸில் காத்திருந்த கொரோனா நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் தீவிரத்தன்மை அதிகம் கொண்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஆனால், அந்த வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காத இடங்களிலிருந்து ஏராளமானோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸில் வருகின்றனர்.

அவ்வாறு நேற்று வந்த 25 பேர் ஆம்புலன்ஸிலேயே சுமார் 4 மணி நேரம் காத்துக்கிடக்கும் சூழலுக்கு ஆளாகினர். அங்கு ஆயிரத்து 200 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க முடியாத இக்கட்டான நிலை உருவானது. இதனால் சிகிச்சையே பெற முடியாமல் நான்கு கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து, அரசு மருத்துவர்கள் ஆம்புலன்ஸூக்கே நேரடியாகச் சென்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், ஆக்சிஜன் படுக்கைகள் அடுத்தடுத்து காலியானதால், எஞ்சிய 21 நோயாளிகளும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் வந்தவர்களில் 4 பேர் அதே வாகனத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.