ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முகநூல்
தமிழ்நாடு

ஆம்ஸ்ராங் வழக்கு: "கைதானவர்களை எப்படி அழைத்து செல்கிறீர்களோ அப்படியே ஒப்படைக்க வேண்டும்"- நீதிமன்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள தன் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கைதானவர்களில் பொன்னை பாலு, ராமு, அருள் மற்றும் ஹரிஹரன் ஆகியோரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல்துறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இதற்காக 4 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, ஹரிஹரனை 4 நாள்களும், மற்ற மூவரை 3 நாள்களும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அப்போது நீதிபதியிடம் பொன்னை பாலு, ராமு மற்றும் அருள் ஆகியோர், திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தது போல தங்களையும் காவல்துறையினர் எண்கவுண்டர் செய்யவுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதி, “4 பேரையும் எப்படி அழைத்து செல்கிறீர்களோ அப்படியே நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், அவர்களது உடம்பில் சிறு காயமும் ஏற்படக்கூடாது, சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும்” என உதவி ஆணையர் சரவணனை எச்சரித்து, உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்து பெற்றார். பின்னர் காவலில் எடுக்கப்பட்ட 4 பேரும், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.