உதயநிதி ஸ்டாலின் x page
தமிழ்நாடு

அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்.. துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் இடமாற்றம்

தமிழக அமைச்சரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது

PT WEB

தமிழ்நாட்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகியுள்ளார். 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று செயல்பட்ட நிலையில், மூன்றாவது துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இடையே 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக செயல்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக அறிவுரை வழங்கி இருந்தார். அதில், துணை முதலமைச்சராக நியமிக்கபட்டுள்ள உதயநிதி தனக்குத் துணையாக அல்ல; நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கப் போகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

எப்படி இருந்தாலும், உதயநிதி துணை முதலமைச்சராக பதவி வகித்தாலும் தன்னிசையாக இயங்குவதற்கான அதிகாரம் பெரிதாக இல்லை என்ற அரசியல் விவாதங்களும் தனியாக நடந்து வருகின்றன.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்ததாக துரைமுருகன் அமைச்சரவையில் 2வது இடத்தில் உள்ளார். அமைச்சரவையில் 4வது இடத்தில் கே.என். நேரு, 5வது இடத்தில் ஐ.பெரியசாமி, 6வது இடத்தில் பொன்முடி உள்ளனர்.

7வது இடத்தில் எ.வ.வேலு, அடுத்தடுத்த இடங்களில் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், KKSSRR உள்ளனர். செந்தில் பாலாஜிக்கு 21வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33, கயல்விழிக்கு 35வது இடம் தரப்பட்டுள்ளது.