சேலம் மேட்டூர் pt desk
தமிழ்நாடு

சேலம்: 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னம் கண்டுடெடுப்பு - வரலாற்று ஆர்வலர்கள் வைக்கும் கோரிக்கை

webteam

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் ஆரியக்கவுண்டனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு மேற்கே உள்ள வயல்வெளிகளில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த ஏராளமான ஈமச்சின்னங்கள் கற்குவை, கல்வட்டம், கல்திட்டை என பல வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல அழிக்கப்பட்டு வயல்வெளிகளில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.

ஈமச்சின்னங்கள் என்றால் என்ன?

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் பெருங்கற்காலத்தைச் சார்ந்த மக்கள் பல்வேறு இனக் குழுக்களாக பிரிந்து வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவனோ தலைவியோ இருந்தனர். அந்தக் குழுவின் தலைவன் இறந்தால் அவரின் நினைவாக அவரை புதைத்த இடத்தின் மேல் நான்கு புறமும் கல்பலகையால் அடைத்து அதன் மேல் மிகப்பெரிய மூடுகல்லால் மூடுவர்.

இதன் கிழக்குப் புறத்தில் ஓர் இடதுளை இடப்பட்டிருக்கும். இதன் வழியே ஆன்மாவானது சூரியனை அடையும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. மேலும் மிகப்பெரிய தலைவனை காட்சிப்படுத்துவதற்கு இந்த கல் திட்டையைச் சுற்றிலும் கல்குவையோ கல் வட்டங்களோ அமைப்பது வழக்கமாக இருந்துள்ளது.

மேட்டூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமச்சின்னம்...!

அப்படியான ஒரு ஈமச்சின்னமாது, அதாவது இடுதுளையுடன் கூடிய கல்திட்டை ஒன்று, மூடுகல்லால் மூடப்பட்டு பாதி மண்ணில் புதைந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வரலாற்று ஆர்வலர் கார்த்திக் என்பவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதில், இந்த ஈமச்சின்னம் என்று சொல்லக்கூடிய கல்திட்டை சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் அருகே பல குழிகளுடன் கூடிய மூடுகற்களும், எலும்புகளும் சிதறிக் கிடக்கின்றன. இதன் மூலம் பெருங்கற்காலத்தைச் சார்ந்த மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருப்பதை உறுதியாக அறிய முடிகிறது.

மேலும் இப்பகுதியில் உள்ள ஈமச்சின்னங்கள் அழிக்கப்பட்டு மயான பகுதியாக இருந்த அந்த இடம் தற்பொழுது விளை நிலமாக மாறி உள்ளது. அந்த கிராமப் பகுதியில் ஆங்காங்கே மூடு கற்கள் சிதறிக் கிடப்பதோடு அதனை கரை கட்டுவதற்கும் பல்வேறு விவசாய பணிகளுக்கும் என்னவென்றே தெரியாமல் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே அதற்கான சுவடுகள் காணப்படுகிறது. எனவே தொல்லியல் துறையும், தமிழக அரசும் இதனை கவனத்தில் கொண்டு இப்பகுதியை கள ஆய்வு மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.