ஊத்தங்கரை அருகே நகைக் கடையின் சுவற்றை துளையிட்டு 30 பவுன் தங்கம் 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் மெயின் ரோட்டில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் (52) என்பவர் ஸ்ரீ விக்னேஷ்வர் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று வியாபாரம் முடித்து மாலை 6 மணிக்கு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு திருப்பத்தூர் சென்றுள்ளார் அவர்.
இந்த நிலையில் இன்று காலை அவருடைய நகை கடையில் துளையிட்டுள்ளதாக சேகருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து வந்த சேகர், கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்பக்கம் சுவற்றில் துளையிட்டு கொள்ளையர் கடைக்குள் புகுந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தது தெரியவந்தது.
பொங்கல் சமயம் என்பதால் அதிக அளவில் தான் வைத்திருந்த கால் கொலுசு, கொடி வகைகள் மற்றும் மெட்டி வகைகள் என 25 கிலோ வெள்ளி நகைகளும் 30 பவுன் தங்க நகைகளும் கொள்ளை போனதாக உரிமையாளர் சேகர் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் கடைக்குள் இருந்த கேமரா சாதனங்களையும் (Hard disk உட்பட) எடுத்துச் சென்றுள்ளனர்.
இதைத் தொடந்து கிருஷ்ணகிரி கைரேகை DSP தலைமையில் குழவினர் தடையங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் மோப்ப நாய் ரேஷ்மி சம்பவ இடத்தில் இருந்து அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் வரை சென்று திரும்பி விட்டது. மெயின் ரோட்டில் உள்ள நகைக் கடையை துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.