தமிழ்நாடு

மதம் மாறிய 30 குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு ? - மதுரையில் புகார்

webteam

மதுரை அருகே சத்தியமூர்த்தி நகரில் மதம் மாறியதால், கட்டப்பஞ்சாயத்து செய்து 30 குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

மதுரை அருகேயுள்ள சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் சிலர் வேறு மதத்திற்கு மாறியுள்ளனர். தற்போது சமீபக்காலமாக வேறு சிலரும் மதம் மாறத் தொடங்கியதால், இருதரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மதமாற்றம் செய்வதாகக் கூறி 30 குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

மதம் மாறியவர்களை நியாயவிலை கடை, பொது குடிநீர் குழாயை பயன்படுத்தவிடாமல் அச்சுறுத்துவதாகவும், தெருவுக்குள் செல்லவிடாமல் தடுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டுக்களை மற்றொரு தரப்பினர் முற்றிலும் மறுத்துள்ளனர். மாற்று மதத்தை தழுவிய சிலர், தங்களின் குலத்தொழிலான குறி சொல்லும் தொழிலை இழிவுப்படுத்தும் வகையில் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தனிடம் கேட்டதற்கு, வரும் 21ஆம் தேதி நடைபெறும் சமாதானக் கூட்டத்தில் இந்த பிரச்னைக்கு தீர்வுக்காணப்படும் என்று தெரிவித்தார்.