திருவள்ளூர் அருகே 30 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் பகுதியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட எண்ணெய் லாரிகளில் இடமாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 3 டேங்கர் லாரிகளில் கலப்பட எண்ணெய் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் 3 லாரிகளையும் முடக்கிய அதிகாரிகள், அதில் இருந்த 30 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெயையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்துள்ள போலீஸார், எண்ணெய் கலப்படம் செய்த குற்றவாளிகள் குறித்தும், எதற்காக இடமாற்றம் செய்யப்பட்டது எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.