தமிழ்நாடு

‘ராங் நம்(ண்)பர்’ மூலம் வந்த துயரம் - 3 வயது குழந்தை பரிதாப பலி

‘ராங் நம்(ண்)பர்’ மூலம் வந்த துயரம் - 3 வயது குழந்தை பரிதாப பலி

webteam

கோவையில் 3 வயது சிறுமியை படுகொலை செய்து முட்புதரில் வீசிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்‌ற‌னர்.

கோவை மாவட்டம் காரமடை வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ரூபிணிக்கு ‘தவறுதலான போன் அழைப்பு’ (WRONG CALL) மூலம் தமிழ்ச்செல்வன் என்‌பவர் அறிமுகமாகியுள்ளார். அந்த நபருடனான பழக்கம் எல்லை மீற, ரூபிணிக்கும் அவ‌ரது கண‌‌வர் பால்ராஜூக்கும் இடையே பிரச்னை வெடித்தது. தனது 3 வயது குழந்தை தேவிஸ்ரீயுடன் வீட்டை விட்டு வெளியேறினார்‌ ரூபிணி. உறவினர் வீட்டில் வசித்து வந்த ரூபிணியை தன்னுடன் ‌வரும்படி ‌தமிழ்ச்செல்வன் அழைக்க, அவருடன் ‌சென்றுள்ளார். ரூபிணியுடன் அவரது மகள் இருப்பதை தமிழ்ச்செல்வன் விரும்பவில்லை. 

இந்நிலையில் பாட்டி வீட்டில் விட்டுவிடுவதாகக்கூறி தேவிஸ்ரீயை தமிழ்ச்செல்வன் அழைத்துச் சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்து தனியே திரும்பி வந்த தமிழ்ச்செல்வனிடம் குழந்தையை மீண்டும் அழைத்து வந்து தன்னிடம் விடும்படி ரூபிணி கூறியுள்ளார். அதன் பேரில் வீட்டிலிருந்து வெளியேறி‌ய தமிழ்ச்செல்வன் திரும்பி வரவேயில்லை. திரும்பாதது அவர்‌ மட்டுமல்ல சிறுமி தேவிஸ்ரீயும்தான். தன் மகளை தேடி அலைந்த ரூபிணி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

தமிழ்ச்செல்வனையும் சிறுமியையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தேவிஸ்ரீ உடல் கரட்டுமேடு என்னுமிடத்தில் சாலையோர முட்புதரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.‌ சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் அவரது உடலில் உள்ளன. பாட்டி வீட்டில் விடுவதாகக் கூறி தேவிஸ்ரீயை அழைத்துச் சென்‌ற தமிழ்ச்செல்வன், சிறுமியைக் கொலை செய்து முட்புதரில் வீசியிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக ‌உள்ள தமிழ்ச்செல்வனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.