சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பையா - முத்துக்காளி தம்பதி. அவர்களுக்கு மூன்று மகன்கள். அந்த மகன்கள்தான் தற்போது தங்களின் அன்னைக்கு ஒரு கோடி ரூபாயில் கோயில் கட்டியுள்ளனர். தங்கத்தில் கோபுரக் கலசமும், அன்னையின் சிலையை ஐம்பொன்னிலும் செய்துள்ளனர்.
560 கிலோ எடையில் 5 அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலையை நிறுவியுள்ள மகன்கள், செண்டை மேளம் முழங்க, குதிரையாட்டத்துடன் தடபுடலாக ஊர் உறவுகளை கூட்டி வைத்து குடமுழுக்கு நடத்தி உள்ளனர்.
தங்கள் தாயின் வளர்ப்பால்தான், உயர்ந்த நிலையை அடைந்தோம் எனக் கூறும் மகன்கள், தாய் முத்துக்காளி தங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததாக தெரிவித்தனர்.
பால், மோர், தயிர் விற்பதும், விவசாய நிலத்தின் மூலம் கிடைத்த குறைந்த வருவாயை வைத்து படிக்க வைத்தார் என்றும், தாலியையும் கொடுத்து படிக்க வைத்தாகவும் தெரிவித்தனர். பாசக்கார தாய், 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாக கூறும் மகன்கள், அவரது நினைவை போற்றவும், பாசத்தை பறைசாற்றவும் எண்ணியதால், தாய்க்கு ஐம்பொன்னில் சிலை செய்து கோயில் எழுப்பினோம் என்றனர்.
இது குறித்து தனது தாய்க்கு கோயில் கட்டிய சண்முகநாதன், பேசியபொழுது, “பெரிய குடும்பத்தில் பிறந்த தாய், கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைத்தார். இதற்காக பலரிடமும் கடன் வாங்கி எங்களை பட்டதாரிகளாக உருவாக்கினார். நாங்கள் நல்ல நிலைக்கு வந்தபோது அம்மா எங்களுடன் இல்லை. ஆகவே தற்போது அவர் நினைவாக கோயில் கட்டியுள்ளோம்” என்றார்.
560 கிலோ சிலையை சொந்த ஊரில் நிறுவிய மகன்கள், ஸ்ரீமுத்துக்காளி அம்மாள் என கோயிலுக்கு அம்மாவின் பெயரையே சூட்டி நெகிழ்ந்து உள்ளனர்.
நடிகர், நடிகையருக்கு கோயில் கட்டும் இந்தக் காலத்தில், கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாய்க்கு கோயில் கட்டிய மகன்களை, அப்பகுதியினர் மனதார பாராட்டினர். எல்லோராலும் கோயில் கட்ட முடியாது... ஆனால், தாயை கும்பிடலாம்..!