Tragedy pt desk
தமிழ்நாடு

விழுப்புரம்: கிணறு வெட்டும் பணியின்போது 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு - மரணத்தில் உறவினர்கள் சந்தேகம்!

விழுப்புரம் அருகே கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

webteam

செய்தியாளர்: முத்துக்குமரன்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை கிராம எல்லை பகுதியில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கிணறு வெட்டும் பணிகள் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மிகவும் ஆழமான இந்த கிணற்றுக்குள் இறங்கி நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஹரி கிருஷ்ணன் (40), பெருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் தனிகாசலம் (48), நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த தாஸ் மகன் முருகன் (38) ஆகியோர் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Ambulance

இந்நிலையில், நேற்று இரவு கிணறு தோண்டும் பணியில் இருந்த மூவரும் கிணற்றுக்குள் சடலமாக கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த விழுப்புரம் போலீஸ் துணை கண்காணிப்பாளர், திருவெண்ணைநல்லூர் போலீசார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர்.

ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், கயிறு அறுந்து இவர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழக்கவில்லை எனவும், கிணற்றுக்குள் வெடிவைத்த போது தான் உயிரிழந்திருக்கக் கூடும் எனக் கூறி சடலத்தை எடுக்க விடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து ஒருமணி நேரம் பேச்சு வார்த்தைக்குப் பிறகு சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.